முன்னொரு காலத்தில் 'அத்திரேய சுப்ரபர்' என்ற முனிவர் விஷ்ணுவை குறித்து யாகம் செய்ய இடம் தேடி அலைந்து இந்த இடத்தை அடைந்தார். யாகசாலை அமைக்க பூமியைத் தோண்டும்போது ஒரு தராசும், வில்லும் கிடைத்தது. அவர் அதை கையில் எடுத்தபோது வில் ஒரு புருஷனாகவும், தராசு ஒரு பெண்ணாகவும் மாறினர். குபேரன் தங்களை சபித்ததாகவும், தற்போது சாப விமோசனம் பெற்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தராசு (துலை), வில் இரண்டும் இங்கு சாப விமோசனம் அடைந்ததால் 'துலைவில்லைமங்கலம்' என்று வழங்கப்படுவதாக புராண வரலாறு. இங்கு இரண்டு கோயில்கள் அருகருகே அமைந்துள்ளன. அதனால் 'இரட்டைத் திருப்பதிகள்' என்று அழைக்கப்படுகின்றன.
முதல் கோயில் மூலவர் தேவப்பிரான் என்ற திருநாமத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உத்ஸவர் திருநாமம் ஸ்ரீநிவாஸன். தனிக்கோயில் நாச்சியார்கள் இல்லை. இரண்டாவது கோயில் மூலவர் அரவிந்தலோசனன் என்ற திருநாமத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உத்ஸவர் திருநாமம் செந்தாமரைக் கண்ணன். தாயார் கருந்தடங்கண்ணி நாச்சியார் என்று வணங்கப்படுகின்றார். இந்திரன், வாயு, வருணன் ஆகியோருக்கு பகவான் ப்ரத்யக்ஷம்.
அருகில் உள்ள சௌரமங்கலம் கிராமம் நம்மாழ்வாரின் அவதார ஸ்தலம். இக்கோயில் ஊருக்கு வெளியில் அமைந்துள்ளது. அருகில் வீடுகளோ, ஆள் நடமாட்டமோ இல்லை.
மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய்த ஸ்தலம். ஆழ்வார் நவதிருப்பதிகளில் ஒன்று.
நம்மாழ்வார் 11 பாசுரங்கள் பாடியுள்ளார். இக்கோயில்கள் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மதியம் 1 மணி முதல் 5 மணி வரையும் திறந்திருக்கும்.
|